லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
India Probable Playing XI For 3rd Test: லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பிரஷித் கிருஷ்ணா நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிநடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஷ் டங் நீக்கப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இப்போட்டிக்கான இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியுடன் இருப்பதன் காரணமாக லெவனில் இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரண்மாக கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சோபிக்க தவறிய பிரஷித் கிருஷ்ணா அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் பிரஷித் கிருஷ்ணா இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடி 4 இன்னிங்ஸ்களில் 55.16 சராசரியாகவும் 5.33 மோசமான எகானமியாகவும் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இது தவிர, தொடரின் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 13 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 72 ரன்களை வாரி வழங்கி இருந்தார். இதன் காரணமாகவே லார்ட்ஸ் டெஸ்டில் அவர் லெவனில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதுதவிர அணியில் ஏற்படக்கூடிய மற்றொரு மாற்றமாக நிதீஷ் குமார் ரெட்டி லெவனில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன், பந்துவீச்சிலும் அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அவரது இடத்தில் சாய் சுதர்ஷன் அல்லது ஷர்தூல் தாக்கூரை இந்திய அணி களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
இந்திய அணியின் உத்தேச லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி/ஷர்துல் தாக்கூர்/சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.