WI vs IND, 5th T20I: பிஷ்னோய், குல்தீப், அக்ஸர் அபாரம்; விண்டீஸை பந்தாடியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அனி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 1 என கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் வீரர் இஷான் கிஷான் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். எனினும் மறுமுணையில் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்ம் அவுட் என்ற விமர்சனங்களுக்கு அவர் முற்று புள்ளி வைத்தார். மொத்தமாக 40 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 64 ரன்களை விளாசினார்.
ஸ்ரேயாஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய இளம் வீரர் தீபக் ஹூடா 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 13 ஓவர்களில் 122 /3 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு சென்றது. விக்கெட்கள் ஒருபுறம் விழுந்தாலும் இந்திய அணி தனது அதிரடி ஃபார்முலாவை மட்டும் விடவில்லை. அதே ரன்ரேட்டை தொடர்ந்து வெளிகாட்டி வந்தது.
3ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் விளையாடி 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர், ஷமாரா ப்ரூக்ஸ், தேவன் தாமஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மைய பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் கடைசிவரை போராடிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்த கையோடு 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 15.4 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 88 ரன்களை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 4-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று சாதித்தது.