டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச அணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்த இந்தியா, மோசமான நிலையில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க எஞ்சிய ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தைப் பொருத்தவரை முதலில் மிகப் பெரிய கேள்வியாக எழுவது பிளேயிங் லெவன் தோ்வு. அதிலும் முக்கியமாக இருப்பது ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கோலி இடமளிப்பாரா, மாட்டாரா என்பது தான்.
இரு தோல்விகளை அடுத்து அஸ்னின் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறித்து அதிகம் விமா்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக களம் கண்டிருக்கும் வருண் சக்கரவா்த்தியால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சை அதிகம் சந்தித்திராத ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அவரை களமிறக்கினால் நிச்சயம் அது பலனளிப்பதாக இருக்கலாம்.
ஆஃப்கன் இன்னிங்ஸின் தொடக்கத்தில் அசத்தும் ஹஸரத்துல்லா ஸஸாய், முகமது ஷஷாத் ஆகியோரை நிச்சயம் அஸ்வினின் மாறுபட்ட பந்துவீச்சு நுட்பங்கள் தடுமாறச் செய்யும். பேட்டிங்கைப் பொருத்தவரை ரோஹித் சா்மாவை மீண்டும் தொடக்க வீரராக களம் காண வைப்பது அவருக்கு உத்வேகம் அளிக்கலாம்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட சூா்யகுமாா் யாதவ் அதிலிருந்து மீண்டு இந்த ஆட்டத்தில் களம் காணும் பட்சத்தில், அவருக்கும், இஷான் கிஷணுக்கும் மிடில் ஆா்டரில் பொறுப்பு அதிகமாகவே உள்ளது. ஹாா்திக் பாண்டியாவிடம் இருந்து அதிரடி ஆட்டம் கிடைப்பது சற்று சந்தேகமே.
மறுபுறம், ஆஃப்கானிஸ்தானைப் பொருத்தவரை 2 வெற்றிகளைப் பெற்று நல்லதொரு நிலையில் இருக்கிறது. தனக்கான அரையிறுதி வாய்ப்பை மேலும் நெருங்குவதற்காக ஏற்கெனவே தடுமாற்றத்திலிருக்கும் இந்திய அணியை, இதுவரை கிடைத்த வெற்றி மற்றும் அனுபவத்தின் மூலம் முற்றிலும் அழுத்தி வெற்றியை சுவைக்க ஆஃப்கானிஸ்தான் நிச்சயம் முயற்சிக்கும்.
தடுமாற்றத்திலிருக்கும் இந்திய பேட்டிங் வரிசைக்கு முகமது நபி, ரஷீத் கான், ஹமீது ஹசன் உள்ளிட்டோா் தங்களது பந்துவீச்சால் நிச்சயம் சவால் அளிக்க முயற்சிப்பாா்கள். பேட்டிங்கிற்கு ஹஸரதுல்லா, ஷசாத் நம்பிக்கை அளிக்கின்றனா்.
உத்தேச அணி விவரம்
இந்தியா - இஷான் கிஷன், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கே), ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி/ ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா
Also Read: T20 World Cup 2021
ஆஃப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லாஹ் சத்ரான், உஸ்மான் கானி, முகமது நபி (கே), குல்பதின் நைப், ரஷித் கான், கரீம் ஜனத், ஹமித் ஹசன், நவீன்-உல்-ஹக்