IND vs AUS, 1st T20I: ஹர்திக் காட்டடி, ராகுல் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் அதிரடியாக தொடங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 2 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - சூர்யக்குமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 55 ரன்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் வந்த அக்ஸர் படேலும் 6 ரன்களோடு நடையைக் கட்ட, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடினார்.
பின் தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 71 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.