இந்தியா vs தென் ஆப்பிரிக்க, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு3 டி 20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகலுக்கும் இடையேயான முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இந்தத் தொடரை இந்திய அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். முக்கியமாக இறுதிக்கட்ட பந்து வீச்சு மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும்.
ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மொகமது ஷமி, கரோனா தொற்றில் இருந்து குணமடையவில்லை என்பதால் அவரும் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹர்ஷால் படேல் அதிக அளவில் ரன்களை வழங்கினார். ஓவருக்கு சராசரியாக 12 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருந்தார்.
எனினும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டுஹர்ஷால் படேலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள தீபக்சாஹருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். ஏனெனில் கடந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேலும் பிரதான பந்து வீச்சாளர்களை சுழற்சி முயற்சி முறையில் அணி நிர்வாகம் பயன்படுத்த முடிவு செய்தால் தீபக் சாஹர் விளையாடும் லெவனில் இடம்பெறுவார். அர்ஷ்தீப் சிங் இறுதிக்கட்ட ஓவர்களில் ஜஸ்பிரீத்பும்ராவுடன் இணைந்து அணியை வலுப்படுத்த முயற்சிக்கக்கூடும். காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் யுவேந்திர சாஹல் முதல் இரு ஆட்டங்களிலும் ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஆட்டத்தில் மட்டுமே சீராக செயல்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.
பேட்டிங்கில் கே.எல்.ராகுல் இந்தத் தொடரை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டக்கூடும். ஏனெனில் காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2 ஆட்டங்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மட்டையுடன் சிறந்த தொடர்பில் இருப்பதால் உலகக் கோப்பை தொடருக்கு புறப்படுவதற்கு முன்னர் கே.எல்.ராகுலும் அதே முழுவீச்சில் இருப்பது முக்கியம்.
தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த தொடரில் அதிக நேரம் பேட் செய்ய வாய்ப்பு வழங்கப்படக்கூடும். ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்கும் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ள தினேஷ் கார்த்திக், உலகக் கோப்பை தொடரில் இறுதிக்கட்ட பேட்டிங்கில் முக்கியபங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுவதால் அதற்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க தொடரில் அவரை பயன்படுத்திக் கொள்ள அணி நிர்வாகம் திட்டமிடக்கூடும்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆஸ்திரேலிய சூழ்நிலையும் இங்குள்ள சூழ்நிலையும் முற்றிலும் மாறுபட்டதுதான். எனினும் பெரிய அளவிலான தொடருக்கான போட்டிக்கு பயற்சியாக தற்போதைய டி 20 தொடரை இரு அணிகளும் பயன்படுத்திக்கொள்ளும்.
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கக அணியில் அனுபவ வீரர்கள் டேவிட் மில்லர், குவின்டன் டி காக், காகிசோ ரபாடா போன்றவர்கள் இருப்பது அந்த அணிக்கு பலமிக்கதாக பார்க்கப்படுகிறது. ராஸா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்கரம், ரூசோவ், க்லாசின் போன்ற பேட்டர்கள் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.
அதேசமயம் பந்துவீச்சில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, நிகிடி, ஷம்ஸி, கேசவ் மகாராஜ் போன்றவர்கள் என அனைவருமே தரமானவர்களாக உள்ளனர். இதனால், இன்று வெற்றிக்காக இந்தியா கடுமையாக போராடும் நிலை இருக்கும் எனக் கருதப்படுகிறது.
உத்தேச அணி
இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல்/முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா (கே), டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.