IND vs SA, 4th T20I:  தினேஷ் கார்த்திக் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 170 டார்கெட்!

Updated: Fri, Jun 17 2022 20:42 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும், 3ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற, தென் ஆப்பிரிக்கா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. முதல் 3 போட்டிகளில் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். வழக்கம்போலவே டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார். அதன்பின் 5 ரன்களில் கெய்க்வாட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின் மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த் இஷான் கிஷானும் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இப்போட்டியிலாவது ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் 17 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா - தினேஷ் கார்த்திக் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்திக் பாண்டியாவை மறுமுனையில் நிற்கவைத்து தினேஷ் கார்த்திக் தனது வானவேடிக்கையை காட்டினார்.

இதன்காரணமாக அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்பின் 19ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விளாசிய ஹர்திக் பாண்டியா, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். கிட்டத்திட்ட இந்திய அணி தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில் பங்கேற்றிருந்த தினேஷ் கார்த்திக் 16 ஆண்டுகள் கழித்து தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்த பந்திலேயே கலைந்தது. 55 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் சிக்சர் அடிக்க முயற்சித்து வெண்டர் டூசெனிடம் கேட்ச் கொடுத்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 55 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை