IND vs SL: இரண்டாவது போட்டி நடைபெறுவதில் சிக்கல்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி ஏற்கனவே ஒரு போட்டியை வென்றுவிட்டதால் தொடரை கைப்பற்றும் முணைப்புடன் களமிறங்குகிறது.
இந்த போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தனது 11ஆவது வெற்றியை பதிவு செய்யும். இதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார். அவர் இதுவரை 16 போட்டிகளில் 15 போட்டிகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சாதனைகளை படைக்க இன்னும் காத்திருக்க வேண்டும் போல. ஆம், போட்டி நடைபெறும் தர்மசாலாவில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே அங்கு மழைப்பொழிவு தொடங்கிவிட்டது. அதன்படி 70 சதவீதத்திற்கு மேல் மழைப்பொழிவு இருக்கலாம்.
இடையில் ஏதேனும் மழைப்பொழிவு நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியை நடத்தி முடித்துவிடலாம். ஆனால் அங்கு கடும் மேக மூட்டம் இருக்கும் என்பதால் வெளிச்சம் குறைவாகவே இருக்கும். இதுமட்டுமல்லாமல் மழை தரும் இடைவெளி 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் மட்டுமே என்பதால் விட்டு விட்டு போட்டி நடத்த நேரிடும்.
இது ஒருபுறம் இருக்க வீரர்கள் இன்று காலை முதலே எந்தவித பயிற்சிகளிலும் ஈடுபடாமல் உள்ளதாக தெரிகிறது. அங்கு மழைப்பொழிவு இருப்பதால் அனைவரும் தங்களது அறைகளுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்துக்கொள்ளும் படி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடருக்கு பின்னர் ஜூன் மாதத்தில் தான் இந்தியா டி20ல் விளையாடும். எனவே உலகக்கோப்பையை மனதில் வைத்து பிசிசிஐ கவனமாக மைதானங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.