டி20 உலகக்கோப்பை: இந்திய அணி தான் வெற்றிபெற அதிக வாய்ப்பு - அசார் மஹ்மூத்!
டி20 உலகக்கோப்பை தொடரின் 7ஆவது சீசன் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கோலகலமாக தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.
வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன.
மேலும் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டையும் வைத்துள்ளது. அதனால் இப்போட்டியிலாவது இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று வெறியுடன் களமிறங்க காத்திருக்கிறது
இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான அசார் மஹ்மூத், “இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதுமே ஸ்பெஷல் தான். அதிகமான எதிர்பார்ப்பும், வீரர்கள் மீது அதிகமான அழுத்தமும் இருக்கும். அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணி தான் வெல்லும்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அந்தவகையில், இந்த போட்டியிலும் அப்படித்தான். ஆனால் எதார்த்தம் என்னவென்றால், இந்திய அணிக்கு சாதகம் சற்று அதிகம். ஏனெனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் ஐபிஎல்லில் ஆடியிருக்கிறார்கள். அதுவும் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள, அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான். அமீரக கண்டிஷனுக்கு பாகிஸ்தானை போலவே இந்தியாவும் பழக்கப்பட்ட அணி தான். எனவே பாகிஸ்தானைவிட இந்தியாவிற்கு சற்று அதிக சாதகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.