பயிற்சியை ரத்து செய்த இந்தியா; தோனியின் ஐடியாவால் வாலிபால் விளையாடிய வீரர்கள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி நாளை துபாய் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. 2ஆவது இடத்திற்கு தற்போது நியூசிலாந்து மற்றும் இந்திய அணி போட்டிப்போடுகிறது. இதன் பின்னர் ஸ்காட்லாந்து, நமிபியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற சிறிய நாடுகளுடன் தான் போட்டி உள்ளதால், நியூசிலாந்தை வென்றால் தான் இந்தியாவால் அரையிறுதி வாய்ப்பை பிராகசப்படுத்த முடியும்.
இப்படிபட்ட முக்கியமான போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக கடந்த போட்டியில் சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், தவறை சரிசெய்ய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் ப்ளேயிங் 11 நேற்று இரவு இறுதிசெய்யப்படவிருந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களின் உடற்தகுதி பரிசோதிக்கப்படவிருந்தது. இந்நிலையில் அதில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வீரர்களை தேர்வு செய்யும் மிக முக்கியமான பயிற்சி இருந்தது. ஆனால் அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்திய அணி தற்போது துபாயில் உள்ள தி பால்ம் ஹோட்டலில் தங்கியுள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடங்கியது முதல் அங்குள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் தான் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று திடீரென துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளுங்கள் என ஐசிசியிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது.
இந்திய அணி தங்கியிருக்கும் துபாய் ஹோட்டலில் இருந்து அபுதாபிக்கு செல்ல 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்தவகையில் பயிற்சி மேற்கொள்ள மொத்தம் 4 மணி நேரம் பயணத்தில் மட்டுமே செலவு செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக எங்களுக்கு பயிற்சியே வேண்டாம் என நேற்றைய தினம் இந்திய அணி அறிவித்துவிட்டு சென்றுள்ளது.
பயிற்சியை ரத்து செய்ததால் சில வீரர்கள் ஓட்டல் அறைக்கு சென்று ஓய்வு எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்களை தோனி திடீரென துபாய் கடற்கரை அருகே அழைத்துச் சென்று கைப்பந்து ( வாலிபால்) விளையாடி மகிழ்ந்துள்ளனர். இக்காணொளியை பிசிசிஐ தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல வீரர்களுக்கும் இது அழுத்தத்தில் இருந்து போக்க நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. உடற்தகுதி தேர்வுகள் இன்றைய பயிற்சியின் போது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.