நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு - தகவல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடரானது இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத இருக்கின்றன.
இந்த ஐ.பி.எல் தொடர் முடிந்த பின்னர் அடுத்த சில தினங்களிலேயே அதாவது நாளை மறுதினம் அக்டோபர் 17ஆம் தேதி டி20 உலககோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது.
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை அங்கு டி20 உலகக்கோப்பை தொடரானது தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த சில தினங்களில் நியூசிலாந்து அணி இந்தியா வந்து 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
அந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூர், ராஞ்சி மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. பின்னர் இரண்டு டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஐ.பி.எல் தொடரில் அசத்திய கெய்க்வாட், ஹர்ஷல் பட்டேல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடர் முடியும் முன்னர் இந்த நியூசிலாந்து அணி தொடர் குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.