இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி!

Updated: Fri, Jun 04 2021 08:18 IST
Image Source: Google

இங்கிலாந்து மண்ணில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து  இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது. 

இதற்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமையில் இருந்தனர். நேற்று, வரலாற்றில் முதன் முறையாக இரு அணியும் இணைந்து, மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்து கிளம்பினர். 

அதன்படி இன்று இரு அணியும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,“டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் இந்திய அணி பெருமை கொள்கிறது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இடத்திற்கு வர கடுமையாக போராடி உள்ளோம். இதற்கு கிடைத்த பரிசு தான் உலக டெஸ்ட் பைனல் வாய்ப்பு. தொடர்ந்து இதே ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கிரிக்கெட் என்பது கால்பந்து போலத் தான். சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒருமுறை சாதித்தால் மட்டும் போதாது. வெற்றி நடையை தொடர வேண்டும்.

அங்குள்ள சூழ்நிலைகள் நியூசிலாந்தைப் போல எங்களுக்கும் சாதகமாகத்தான் உள்ளன. எங்களைப் பொறுத்த வரையில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்புள்ளது. மற்றபடி எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை, இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், அவ்வளவு தான். அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் அதிக நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. முக்கிய தொடருக்கு முன் வீரர்கள் ‘ரிலாக்ஸ்’ ஆக இருப்பது நல்ல விஷயம் தான்” என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அப்போது அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு பின் இந்திய அணி வீரர்கள் பயிற்சிகளுக்கு அனுமதிகப்படுவர் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை