இவர் அணியில் இருந்த போதும், கப்பு நமக்கு தான் - சபா கரீம்

Updated: Wed, Jul 14 2021 13:36 IST
Image Source: Google

இந்திய அணிக்கு கபில் தேவுக்குப் பிறகு சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பை அளிக்கக்கூடியவர். 

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் 2018 ஆசிய கோப்பையின்போது, முதுகுப்பகுதியில் அடைந்த காயத்திற்கு பிறகு, அவரது பணிச்சுமை மீது கவனம் செலுத்தப்படுகிறது. எனவே அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பந்துவீசவில்லை.

ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியை கருத்தில்கொண்டு அவர் பந்துவீசவைக்கப்படுவதில்லை. ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது இந்திய அணி காம்பினேஷனை வெகுவாக பாதிக்கிறது. அதனாலேயே, கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவரும் ஹர்திக் பாண்டியாவிற்கு, இலங்கைக்கு எதிரான தொடர் அருமையான வாய்ப்பாக அமையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக மிகத்தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா ஃபார்முக்கு வந்து முழு உடற்தகுதியுடன் பந்து வீசினால், இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சபா கரீம்,“இலங்கை தொடர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் சவாலான தொடர். ஏனெனில் அவர் சென்னை ஸ்லோ பிட்ச்சில் ஸ்கோர் செய்ய திணறினார். எனவே கிட்டத்தட்ட அதேமாதிரியே இருக்கும் இலங்கை பிட்ச்சும் அவருக்கு சவாலாகவே இருக்கும். நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அவரால் பெரிய ஸ்கோர் செய்யமுடிகிறதா என்று பார்க்க வேண்டும். 

ஹர்திக் பாண்டியா பந்து வீசுமளவிற்கு முழு உடற்தகுதி அடைந்து, பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மிற்கு வரும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை வெல்வதற்கான இந்திய அணியின் வாய்ப்பு 2 மடங்கு அதிகமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை