INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா அபார பந்துவீச்சு; இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Dec 30 2023 17:11 IST
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா அபார பந்துவீச்சு; இந்திய அணி 259 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு லிட்ஃபீல்ட் - அலிசா ஹீலி இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அலிசா ஹீலி 13 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லிட்ச்ஃபீல்டுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பெத் மூனியும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து மறுப்பகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்ச்ஃபீல்ட் 63 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த தஹிலா மெக்ராத் 24 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 2 ரன்களுக்கும், அனபெல் சதர்லேண்ட் 23 ரன்களுக்கும், ஜார்ஜியா 22 ரன்களிலும் என ஆட்டமிக்க, அலனா கிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை