INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

Updated: Tue, Jan 09 2024 20:29 IST
INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா! (Image Source: Google)

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியளாரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் பவுண்டரிகளாக விளாசிய ஷஃபாலி வர்மா 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அனுபவ வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இப்போட்டியிலும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தீப்தி சர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரிசா கோஷ் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமன்ஜோத் கவுர் 17 ரன்களையும், பூஜா வஸ்திரேகர் சிக்சர் விளாசியும் ஃபினிஷிங் கொடுத்தனர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வர்ஹாம் தலா 2 விக்கெட்டுகளையும், மேகன் ஷாட், ஆஷ்லே கார்ட்னார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை