ஒலிம்பிக் பயிற்சியாக வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பிசிசிஐ!
கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு நடக்கிறது. வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன.
கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கவுள்ளன. குறிப்பாக கரோனா 2ஆம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தியிருந்தது.
ஒலிம்பிக்கிற்காக இந்திய விளையாட்டு வீரர்கள் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை பிசிசிஐ நிதியுதவியாக வழங்குகிறது.
பிசிசிஐ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே பிசிசிஐ ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது. ஒலிம்பிக் வீரர்களுக்கு உதவ பிசிசிஐ முன்வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.