ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆர் த்ரில் வெற்றி!
சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததோடு, அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின் 53 ரன்களில் ராகுல் திரிபாதி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 80 ரன்களில் நிதிஷ் ராணாவும் பெவிலியன் திரும்பினார்.
இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக் சற்று அதிரடி ஆடி கொல்தக்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 22 (9) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் வார்னர் 3 ரன்களுடனும், சஹா 7 ரன்களுடனும் நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - மனீஷ் பாண்டே இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதில் இருவரும் அரைசதமும் அடித்தனர். அதன்பின் 55 ரன்களில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த நபியும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த சமத், கம்மின்ஸ் வீசிய 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு நம்பிக்கையளித்தார்.
இருப்பினும் கடைசி வரை போராடிய ஹைதராபாத் அணியால் 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.