எனது நூறு சதவீத திறனையும் வெளிப்படுத்துவேன் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணி மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றியை விட, அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியிருப்பது தான் முக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. நேற்றைய போட்டியில் 30 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்தார். இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2 வருடங்களாகவே மோசமான ஃபார்மில் இருந்து வந்தார். .
இதுகுறித்து ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, “முகமது ஷமிக்கு நான் ஸ்பெஷலாக நன்றி கூற வேண்டும். என்னை தாக்கிய அந்த பந்துதான், என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டது போன்று இருந்தது. அதன்பிறகு எனக்குள் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில ஆட்டங்களாக மிக மோசமாக திணறி வந்தேன். ஒவ்வொரு வாய்ப்பையும் புதிய வாய்ப்பாக நினைத்து ஆடினேன். யார் வேண்டுமானாலும் அணியை வெற்றி பெறவைத்து ஹீரோ ஆகலாம். கடந்த காலங்களில் என்ன ஆனது என்பதை மறந்துவிட்டேன். இனி எனது 100 விழுக்காடு ஆட்டத்தையும் கொடுப்பேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஹர்திக் பாண்ட்யா வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.