பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றடையும் வீரர்கள்!
கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்த இந்திய அணி வீரர்களும் இத்தொடருக்காக அமீரம் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வீரர்கள் அழைத்துவர தனி விமானங்கள் கிடைக்காததால், வீரர்கள் பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றுள்ளனர்.
அதன்படி ஜஸ்பிரித் பும்ரா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் பயணிகள் விமானத்தில் நேற்று மான்செஸ்டர் நகரிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
இது தவிர சிஎஸ்கே வீரர்கள், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாக்கூர், மொயின் அலி, சாம் கரன் ஆகியோரும் பயணிகள் விமானத்தில்தான் செல்கின்றனர்.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இப்போதுள்ள சூழலில் பிசிசிஐ சார்பில் எந்த அணியினருக்கும் தனி விமானம் ஏற்பாடு செய்யவில்லை. ஆதலால், ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவைப்பட்டால் தனி விமானத்தை ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை வீரர்கள் சாதாரணப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தால், ஐக்கிய அரபு அமீரகம் சென்று 6 நாட்கள் கட்டாயத் தனிமைபடுத்துதலில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடக்கும் 5-வது டெஸ்ட் முடிந்தபின், இரு அணி வீரர்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்போர் மட்டும் தனித்தனி விமானத்தில் பயோ-பபுள் சூழல் விலகாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உடற்பயிற்சி நிபுணர் ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டதால், 5ஆவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தனித்தனி விமானத்தில் புறப்பட்டுச் செல்கின்றனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுதவிர பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், முகமது ஷமி, டேவிட் மலான் ஆகியோர் மான்செஸ்டர் நகரில் உள்ளனர். இவர்களுக்கும் தனி விமானம் கிடைக்கவில்லை என்பதால் பயணிகள் விமானத்தில் புறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.