ஐபிஎல் திருவிழா 2021: கீப்பர்களுக்கு இடையேயான போட்டியில் வெல்ல போவது யார்? சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியன் பட்டத்தக்கைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த முறை இறுதி போட்டிவரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து இரு அணிகளுடைய பலம், பலவீனம் குறித்த தகவல்களைக் காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையையும் சிஎஸ்கே அணி தன்வசம் வைத்துள்ளது.
ஆனால் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றோடே வெளியேறியது. இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கேற்றார் போல் சுரேஷ் ரெய்னா அணியில் சிஎஸ்கேவிற்கு பெரும் பலத்தை அளிக்கும். அதேபோல் ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டூ பிளேசிஸ், மொயீன் அலி, ஜெகதீசன் என அதிரடியான வீரர்கள் அணியில் இருப்பது சிஎஸ்கேவிற்கான கூடுதல் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சில் தீபக் சஹார், இங்கிடி, ஜடேஜா, சாம் கரன், பிராவோ என வேரியேஷன் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது எதிரணி வீரர்களுக்கு சற்று தலைவலியான ஒன்று தான்.
ஆனால் சிஎஸ்கே அணியில் இருக்கும் அதிகபடியான வீரர்கள் 30 வயதுக்கும் அதிகமானோர் என்பது கடந்த சில ஆண்டுகளாக அணி நிர்வாகத்தின் மீது பெரும் விவாதங்களை ஏற்படுத்திவருகிறது. ஏனெனில் வீரர்களின் பிட்னஸ் மற்றும் அவர்களது திறன்கள் மீதான கேள்விகளையும் எழுப்பிவருகிறது.
ஆனாலும் சிஎஸ்கே அணியின் பலமே அணியில் உள்ள அனுபவ வீரர்கள் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எதுவாக இருப்பினும் தோனி போன்ற கேப்டன் அனுபவம் வாய்ந்த வீரர்களை எவ்வாறு வழிநடத்துவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனாலும், அவரது வியூகம் இந்த சீசனில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாதா அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. அதிலும் கடந்தண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி கோப்பையை நழுவவிட்டது.
இதையடுத்து இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. காயம் காரணமாக அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய கேப்டனாக ரிஷப் பந்த் அணியை வழிநடத்தவுள்ளார்.
ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் ராய், ஹெட்மையர், ஸ்டோய்னிஸ், சாம் பில்லிங்ஸ் என சர்வதேச வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணி, ரபாடா, நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, ரவி அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளதால் நடப்பு சீசனின் வலிமையான அணிகளில் ஒன்றாக டெல்லி அணியும் இடம்பிடித்துள்ளது.
ஆனால் அணியில் ஸ்மித், அஸ்வின், ஷிகர் தவான் போன்ற அனுபவ வீரர்கள் இருக்கும் நிலையில் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது சற்று பலவீனமாகவே கருதப்படுகிறது. இருப்பினும், தனக்கு எதிர்வரும் சவால்களை சாமாளித்து அணியை வெற்றி பாதைக்கு பந்த் அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 முறையும் வெற்றியை ஈட்டியுள்ளன. வெற்றி விகிதத்தில் சென்னை அணி முன்னிலையில் இருந்தாலும், இளம் அதிரடி வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணியை சமாளிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அணி விவரம்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ரிஷாப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா,ரஹானே, ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், ஆக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீன் துபே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிப்பல் பட்டேல், விஷ்ணு வினோத், லுக்மான் மேரிவாலா, சித்தார்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கே.எம்.ஆசிப், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ஃபாப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், நாராயண் ஜெகதீசன், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சாய் கிஷோர், ராபின் உத்தப்பா, மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், செட்டேஸ்வர் புஜாரா, ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா.