ஐபிஎல் 2021: தோனி மட்டும் தடுமாறவில்லை - ஸ்டீபன் ஃபிளமிங்!
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ராயுடு 55 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி, 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியும் அடிக்காமல் 18 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு விளையாடிய டெல்லி அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் தோனியின் நிதானமான, தடுமாற்றமான பேட்டிங் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தோனிக்குப் பதிலாக ஜடேஜா முன்பே களமிறங்கியிருந்தால் சிஎஸ்கே அணி இன்னும் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வாய்ப்புண்டு எனப் பலரும் கருதுகிறார்கள்.
இதுபற்றி சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறிகையில்,“துபாய் ஆடுகளத்தில் தோனி மட்டும் தடுமாறவில்லை. இயல்பாக ரன்கள் அடித்து ஆடுவதற்குக் கடினமாக இருந்தது. 136 ரன்கள் எடுத்தது கிட்டத்தட்ட வெற்றிக்குப் போதுமான இருந்த நிலையில் பெரிய ஷாட்களை அடிப்பதில் சிரமம் இருந்தது.
இன்னிங்ஸின் கடைசிக்கட்டத்தில் இரு அணிகளாலும் ரன்கள் எடுக்க தடுமாற்றம் இருந்தது. 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் விழுந்ததால் இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால் நாங்கள் 150 ரன்கள் எடுக்க இருந்தோம். ஆனால் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணியினர் நன்றாகப் பந்து வீசினார்கள். எனவே எளிதாக ரன்கள் எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.