ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு மேலும் ஒரு அடி; காயம் காரணமாக விலகிய முக்கிய வீரர்!
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள போட்டிகள் செப்ம்டபர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கபதறாக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இதில் பங்கேற்பதற்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டது. துபாய் சென்றுள்ள ஆர்சிபி அணியினர் 6 நாள்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்பிறகே, அந்த அணி பயிற்சியைத் தொடங்க முடியும்.
மேலும் நடப்பாண்டு சீசனிலிருந்து ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன், பின் ஆலென் மற்றும் ஸ்காட் குக்கலீன் ஆகியோர் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடாததால் அவர்களுக்குப் பதில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டிம் டேவிட் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை ஆர்சிபி அணி அதிகாரப்பூர்வமான அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த வாஷிங்டன் சுந்தர் பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்து, அத்தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். இந்நிலையில் அவரது காயம் இன்னும் குணமடையாததால், தற்போது எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
மேலும் வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரராக பெங்கால் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகஷ் தீப்பை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.