ஐபில் 2021: சதமடிப்பதை விட, அணியின் ஸ்கோரே முக்கியம் - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Sun, Oct 03 2021 12:41 IST
Image Source: Google

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்ற இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் தற்போதைய 14ஆவது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.

அணியில் சீனியர் வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கெய்க்வாட் இந்த தொடர் முழுவதுமே சிஎஸ்கே அணிக்காக பேட்டிங்கில் வலிமை சேர்த்து வருகிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியி ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி சதமடித்தார்.

இதுவரை சிஎஸ்கே அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 611 ரன்களை குவித்துள்ளார். இதில் ஆறு அரை சதமும், ஒரு சதமும் அடங்கும். அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் அடித்த சதம் மூலம் அவர் இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தான் விளையாடிய விதம் குறித்து ஆட்ட நேர இடைவெளியில் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “இந்த மைதானம் ஆரம்பத்தில் சற்று நின்று வந்தது. பவர் பிளேவில் நாங்கள் விக்கெட் இழப்பின்றி விளையாடியதால் நிச்சயம் 13-14 ஆவது ஓவர் வரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று யோசித்தேன். மேலும் அப்படி நின்றால் நிச்சயம் அதன் பிறகு இன்னிங்சை பில்ட் செய்ய முடியும் என்று நினைத்து விளையாடினேன். 

பெரிய பெரிய சிக்சர்களை அடிக்கும்போது சரியான டைமிங் மற்றும் என்னுடைய உடல் அசைவுகளை மாற்றாமல் விளையாடினேன். நான் சதம் அடிப்பது பற்றி பெரிதாக யோசிக்கவில்லை ஏனெனில் எப்போதும் அணியின் ஸ்கோர் தான் முக்கியம். தனிப்பட்ட வீரர்களின் ஸ்கோர் முக்கியம் கிடையாது என்பதை நினைப்பவன் நான். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஒருகட்டத்தில் 160 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று நினைத்தேன். அதன்பின்னர் 170, 180 ரன்கள் அடிக்க முடியும் என்று நினைத்தேன். இறுதியில் நாங்கள் 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை