ஐபிஎல் 2022: அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; டைட்டன்ஸுக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் 5 ரன்களிலும், இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பாகவும் அதேவேளை அதிரடியாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து மிரட்டினார். அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரமும் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா, அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அவரைத் தொடர்ந்து 56 ரன்கள் எடுத்திருந்த ஐடன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இறுதியில் ஷஷாங் சிங், மார்கோ ஜான்சென் ஆகியோர் ஒரு சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் லோக்கி ஃபர்குசன் வீசிய கடைசி ஓவரில் இருவரும் இணைந்து 25 ரன்களைச் சேர்த்தனர் .
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது.