ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரஹானே!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் என்று போற்றப்பட்ட ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவை நோக்கி வந்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே சேர்க்கப்படவில்லை. இதனால் ஐபிஎல் மூலம் ரஹானே இந்திய அணியில் இடம்பிடித்து விடலாம் என எண்ணினார்.
ஆனால், கொல்கத்தா அணிக்காகவும் அவரால் ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் பிளேயிங் லெவனில் சில போட்டியில் இடம் கிடைக்கவில்லை.
ரஹானே நடப்பு சீசனில் 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சன்ரைசர்ஸ்க்கு எதிரான போட்டியின் போது ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஃபில்டிங்கில் கூட பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ரஹானேவின் காயம் கொஞ்சம் கவலையளிக்கும் வகையில் அமைந்தது.. இதனால் பயோ பபுளிலிருந்து ரஹானே விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ரஹானே நேரடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, அங்கு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. ரஹானே முதலில் 4 வாரததிற்கு ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர் உடல் தகுதி குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் ரஹானேவால் சில மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது.
இதனால் ஐபிஎல் தொடர் முடிந்ததும் ரஞ்சி கோப்பை, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ரஹானே பங்கேற்க முடியாது. இதன் பிறகு இந்திய அணி, அடுத்த ஆண்டில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இதனால் ரஹானே மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாடுவார் என தெரியவில்லை.
ஒரு வகையில் இந்த காயம் கூட நல்லதுக்கு தான். கிரிக்கெட்டிலிருந்து விலகி பயிற்சி செய்யும் ரஹானே மீண்டும் அடிப்படை விசயத்துக்கு திரும்ப மீண்டும் பலமாக வர வாய்ப்புள்ளது. ஆனால் வயது காரணமாக சரி போதும்பா என்ற முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.