ஐபிஎல் 2022: தோனியுடனான உரையாடல் குறித்த கலந்துரையாடலை பகிர்ந்த கான்வே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் மகேந்திர சிங் தோனி. 2008 சீசன் முதல் சென்னையை வழிநடத்தி வந்தவர். 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர். தற்போது ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கேப்டன்சி குறித்து தானும் தோனியும் பேசிய கலந்துரையாடலை பகிர்ந்துள்ளார் சென்னை அணியின் வீரர் டெவான் கான்வே.
இதுகுறித்து பேசியுள்ள அவர்,“நான் எம்.எஸ். தோனியின் கேப்டன்சியில் விளையாட வேண்டும் என மிகவும் விரும்பினேன். அதனால் அவரிடம் அது குறித்து பேசி இருந்தேன். ‘நீங்கள் கேப்டன்சி செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா? ஏனெனில் அது நடந்தால் நான் எப்படி உங்கள் தலைமையின் கீழ் விளையாட முடியும்’ என்ற ஆர்வத்தில் கேட்டிருந்தேன்.
அதற்கு அவரோ ‘முடியாது. இருந்தாலும் நான் எப்போதும் உங்களை சுற்றி தான் இருப்பேன்’ எனத் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜடேஜா மற்றும் தோனி உடன் நான் மதிய உணவு உண்டேன். அதன் மூலம் அவர்கள் பழக மிகவும் எளிமையானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான அவர்கள் இருவருடனும் பேசுவது மிகவும் எளிது” என தெரிவித்துள்ளார்.