நெட்டிசன்களிடன் சிக்கிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்; விவரம் இதோ!

Updated: Wed, Feb 16 2022 19:07 IST
IPL 2022 Auction: Shaheen Afridi for Rs 200 crore? Pakistan journalist trolled for tall claim on soc (Image Source: Google)

பல வருடங்களாக ஐபிஎல் புதிய திறமைகளை கண்டுபிடித்து வாய்ப்பளித்து வருகின்றது. அதேபோல் ஐபிஎல் மெகா ஏலம் பலரின் கனவுகளை, பலரின் திறமைகளுக்கு சரியான வெகுமதியை கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல. சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலமே அதற்கு சான்று. 

இந்த ஐபிஎல் ஏலத்தில் மட்டும் எண்ணற்ற எளிய பின்னணியை கொண்ட வீரர்கள் பலருக்கு தகுந்த மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் பாலில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிய பஞ்சாப்பின் ரமேஷ் குமார் முதல் சச்சின் மகன் அர்ஜுன் வரை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் ஐபிஎல் மூலமாக உலகறியப்பட்டு வருகிறார்கள், பாகிஸ்தான் வீரர்களை தவிர. ஐபிஎல் தொடக்க காலத்தில் ஷாஹித் அப்ரிடி மற்றும் ஷோயப் அக்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய பதற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

தற்போதைய தலைமுறையில் முகமது ரிஸ்வான், பாபர் ஆசம், ஷதாப் கான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி போன்ற பாகிஸ்தான் அணியின் திறமையான வீரர்கள் ஐபிஎல்லில் இடம்பெறுவது தொடர்பாக அவ்வப்போது விவாதங்கள் எழுந்துவருகிறது.

இந்நிலையில், சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் தெரிவித்த வேடிக்கையான கூற்று ஒன்று நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

இஹ்திஷாம் உல் ஹக் என்ற அந்த பத்திரிகையாளர், "ஐபிஎல் மெகா ஏலத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி கலந்துகொண்டிருந்தால், அவரை ரூ.200 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பார்கள்" என்று ட்வீட் செய்திருந்தார். இஹ்திஷாமின் இந்தக் கருத்தை ​​கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

பலரும், "ஷாஹீன் அப்ரிடி திறமையான வீரர் தான். என்றாலும் கற்பனைக்கு ஒரு எல்லை வேண்டாமா" இஹ்திஷாமின் கருத்துக்கு பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஞ்சித் என்ற ஒரு நெட்டிசன், இஹ்திஷாமின் ட்வீட்டை டேக் செய்து, "ஐபிஎல் அணிகளின் மொத்த பட்ஜெட்டே 90 கோடிதான் மேன்" என்று பங்கம் செய்துள்ளார். இதேபோல் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை