தாய்க்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த ஆவேஷ் கான்!

Updated: Tue, Apr 05 2022 20:44 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் 25 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான். கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி அசத்தியவர் அவர்.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் ஆவேஷ். 

நடப்பு சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் ரன்களை கொடுத்திருந்தார். ஆனால், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பந்து வீசி அசத்தியிருந்தார். 

அதன் பலனாக அவரது அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் பிரதான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

அந்த விருதை பெற்றுக் கொண்ட அவர் அதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அம்மாவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக சொல்லியுள்ளார்.

இதுகுறித்து சக லக்னோ வீரர் தீபக் ஹூடாவுடனான கலந்துரையாடலில் பேசிய அவர், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் அம்மாவுக்கு இந்த விருதை நான் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அம்மா எனது கிரிக்கெட் ஆர்வத்திற்கு உறுதுணைபுரிந்தவர். ஆட்டம் முடிந்ததும், நான் எனது தொலைபேசியில் வீடியோ கால் மூலம் அம்மாவிடம் பேசினேன். அப்போது ஆட்டத்தில் நடந்ததை சொன்னேன். இப்போது கடவுளின் அருளால் அம்மா நலமாக உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை