ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணி குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 )முதல் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு பல சுவாரஸ்யங்கள் இருந்த போதும், சுரேஷ் ரெய்னா இல்லாதது தான் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்காக பல வெற்றிகளை குவித்துள்ள ரெய்னாவை மெகா ஏலத்தில் கைவிட்டனர். இதன் பின்னர் குஜராத் அணி ஜேசன் ராய்-க்கு பதிலாக ரெய்னாவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டதும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் தான் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்தது.
அதாவது சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐபிஎல்-ல் வர்ணனையாளராக களமிறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியும் மீண்டும் வர்ணனை செய்யவுள்ளார். இதனையடுத்து இன்று இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய ரெய்னா, “ஐபிஎல் ஒரு இந்தியாவின் திருவிழாவை போன்று மாறிவிட்டது. இந்தாண்டு இளம் வீரர்களான இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் அதிகம் கவனிக்கப்பட கூடிய வீரர்களாக திகழ்வார்கள், அதில் சந்தேகம் இல்லை.
சென்னை அணி இந்தாண்டு பல சிறந்த ஆல்ரவுண்டர்களுடன் பலமான ஃபார்மில் இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி போன்றோர் அதிக கவனம் பெறுவார்கள்” என கூறினார். சிஎஸ்கே புறக்கணித்த போதும், விட்டுக்கொடுக்காமல் ரெய்னா பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.