ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு!
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் தான் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. மெகா ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ. 14 கோடி செலவழித்து வாங்கியது சென்னை அணி. அவர் மீது அந்த அளவிற்கு தோனி நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது சஹாருக்கு காலில் தசை நார்கிழிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்கவே முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதே போல சிஎஸ்கேவின் எதிர்காலமான பார்க்கப்பட்ட ருதுராஜ் கெயிக்வாட்டிற்கும் காயம் ஏற்பட்டது. அவரை ரூ. 6 கோடிக்கு தக்கவைத்திருந்தது சென்னை அணி. ஆனால் தற்போது அவரும் முதல் பாதி போட்டிகளில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. இருவரும் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணி சிஇஓ காசி விஸ்வநாதன், “எங்களின் 2 வீரர்களின் நிலை குறித்து எங்களுக்கு எதுவுமே இதுவரை தெரியவில்லை. அவர்கள் என்சிஏவில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது மட்டுமே தெரியும். பிசிசிஐ எந்தவித முன்னேற்றத்தையும் கூறவில்லை. ஆனால் அவர்கள் முழு உடற்தகுதி பெற்றுவிட்டால், தகவல் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது” எனத்தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை அணி தற்போது சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஒருவேளை ருதுராஜ் மற்றும் தீபக் சஹார் இல்லையென்றால் பெரும் பின்னடைவாக இருக்கும்.