ஐபிஎல் 2022: எங்கள் தோல்விக்கு இதுவே காரணம் - ரவீந்திர ஜடேஜா!
ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் நேற்று சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் இந்த முறை ருதுராஜ் கெயிக்வாட் கம்பேக் கொடுத்தார். 48 பந்துகளை சந்தித்த அவர் 73 ரன்களை விளாசினார். ஆனால் மற்ற வீரர்கள் ஏமாற்றினர். ராபின் உத்தப்பா 3, மொயீன் அலி 1, ஷிவம் தூபே 19 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதன் பின்னர் வந்த அம்பத்தி ராயுடு மட்டும் 46 ரன்களை எடுக்க சென்னை அணி 20 ஓவர்களில் 169 ரன்களை எடுத்தது.
170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் ஒட்டுமொத்த டாப் ஆர்டரும் ஏமாற்றினர். விருதிமான் சாஹா 11, சுப்மன் கில் 0, விஜய் சங்கர் 0, அபினவ் மனோகர் 12 என அடுத்தடுத்து வெளியேறினர். 5 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - ரஷித் கான் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். மில்லர் 94 ரன்களும், ரஷித் கான் 40 ரன்களும் விளாச, குஜராத் அணி 19.5 ஓவர்களில் 179 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சிஎஸ்கேவின் இந்த 5ஆவது தோல்வி குறித்து பேசிய ஜடேஜா,“நாங்கள் சிறப்பாக தான் தொடக்கத்தை கொடுத்தோம். முதல் 6 ஓவர்களில் பவுலிங் சிறப்பாக செய்தோம். சிஎஸ்கே பேட்டிங் செய்த போது விக்கெட்கள் மெதுவாக இருந்தது. பந்து வழுக்கவில்லை. ஆனால் நாங்கள் பவுலிங் செய்த போது அப்படி இல்லை.
கடைசி 5 ஓவர்களில் திட்டத்தை செயல்படுத்தவே இல்லை. கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டனின் யார்க்கர் சரியாக அமையும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரால் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் தான்” என அதிருப்தியுடன் கூறினார்.