ஐபிஎல் 2022: எங்கள் தோல்விக்கு இதுவே காரணம் - ரவீந்திர ஜடேஜா!

Updated: Fri, Apr 01 2022 12:05 IST
Image Source: Google

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து நேற்று மும்பை மைதானத்தில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி சென்னை அணி இந்த போட்டியில் முதலில் விளையாடியது.

தொடக்க வீரர் உத்தப்பா, மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, ராயுடு, பின்வரிசையில் ஜடேஜா, தோனி என அனைவரும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. உத்தப்பா 50 ரன்களையும், ஷிவம் துபே 35 ரன்களையும், ராயுடு 27 ரன்களையும் குவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது மட்டுமின்றி இறுதியில் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 211 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக ராகுல் 40 ரன்களும், டிகாக் 61 ரன்களும், லீவிஸ் 55 ரன்கள் குவித்து அசத்தினர்

210 ரன்கள் அடித்து சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா, “இந்த போட்டியில் எங்களுக்கு அருமையான ஸ்டார்ட் கிடைத்தது. உத்தப்பா மற்றும் துபே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்க எங்களது பீல்டிங் இன்று மோசமாக அமைந்தது. ஒரு சில கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். நிச்சயம் கேட்ச் பிடித்தால் மட்டுமே போட்டியில் வெற்றி பெற முடியும் என்பது இதில் தெளிவாக தெரிய வந்துள்ளது. நாங்கள் தவறவிட்ட அந்த கேட்ச்களை பிடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

இந்த போட்டியில் பனியின் தாகம் ஒரு மிகப்பெரிய பங்கினை வகித்தது. ஏனெனில் பந்து ஈரமாக இருந்ததால் கைகளில் ஓட்டவில்லை. இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் ஈரமான பந்தினை வைத்து கேட்ச் பிடிக்க பயிற்சி செய்ய உள்ளோம். இந்த போட்டியில் டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அதுமட்டுமின்றி இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருந்தது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை