ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் களமிறங்கியது.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 17.5 ஓவரில் 182 ரன்களை குவித்தனர். 99 ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட், ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு டி.நடராஜனின் பந்தில் ஆட்டமிழந்தார்.
டெவான் கான்வே 85 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 20 ஓவரில் 202 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 203 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து, கடின இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா - கேன் வில்லியம்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராகுல் த்ரிபாதியும் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை மட்டும் விளாசி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன்னும் 47 ரன்களில் விக்கெட்டை இழக்க ஹைதராபாத் அணியின் தோல்வியும் உறுதியானது.
ஆனாலும் அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.