சேலத்தில் பயிற்சி அகாடமியை தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இளம் வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் பயிற்சி அகாடமிகளை தொடங்கி வருகிறது. அதன்படி சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் சிஎஸ்கே அணி பயிற்சி அகாடமிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தஅகாடமிகள் தொடங்கப்படும். இங்கு இருபாலருக்கும் பயிற்சிகள்வழங்கப்படும். முதலில் சென்னை, சேலத்தில் அகாடமிகள் தொடங்கப்படும். பின்னர் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளி நாடுகளிலும் அகாடமி தொடங்க திட்டம் உள்ளது.
சென்னையில் துரைப்பாக்கத்திலும், சேலத்தில் சேலம் கிரிக்கெட் அறக்கட்டளையிலும் அகாடமி செயல்படும். இந்த அகாடமியில் சேர www.superkingsacademy.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, “நாங்கள் 50 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கும் இதுவேசரியான வாய்ப்பாக இருக்கும்.அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன், சூப்பர் கிங்ஸ் அகாடமி உயர்தர பயிற்சி வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.