ஐபிஎல் 2022: மேக்வெல், தினேஷ் கார்த்திக் அதிரடி; டெல்லிக்கு 190 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரர் அனுஜ் ராவத் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 8 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்னிலும், சுயாஸ் பிரபுதேசாய் 6 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஆனால் 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதிலும் குல்தீப் யாதவ் இன்று வீசிய முதல் ஓவரிலேயே 23 ரன்களை விளாசி அசத்தியிருந்தார். ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே அவரிடமே விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடியதுடன் 26 பந்துகளில் அரைசதமும் கடந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 66 ரன்களைச் சேர்த்திருந்தார்.