ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய குஜராத்; தடுமாறிய சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 62ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டேவன் கான்வே 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் - மொயின் அலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் மொயின் அலி 21 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையிலிருந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்து விளையாடிய நாராயணன் ஜெகதீசனும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
இதையடுத்து 53 ரன்களுடன் விளையாடிவந்த ருதுராஜ் கெய்க்வாட், ரஷித் கான் பந்துவீச்சில் தூக்கி அடிக்க முயற்சித்து மேத்யூ வேத்திடம் கேட்ச் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஷிவம் தூபேவும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய எம் எஸ் தோனியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஐந்து ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தாது.
இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் ஜெகதீசன் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.