ஐபிஎல் 2022: ஜெர்சியை வெளியிட்டது குஜராத் டைட்டன்ஸ்!
ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட அசத்தலான ஐபிஎல் 2022 தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்த அட்டவணையின் படி முதல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இம்முறை 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன.
இந்த பிரிவுகள் என்பது இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பையை வென்றது மற்றும் எத்தனை முறை இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளது என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாகவும் 4 முறை கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் குரூப் பி பிரிவில் முதல் அணியாகவும் இடம்பெற்றுள்ளன.
இதை அடுத்து இந்த தொடரில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் அறிமுகமாகி களமிறங்கவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.