ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் மீண்டுவருவது கடினம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி கிரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்டங்கள் தோற்றதால் சொல்லவில்லை, ஐபிஎல் ஏலம் முடிந்தவுடன் மும்பை அணியை புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தான் வைத்தேன். ரூ. 25 கோடியை இரு வீரர்களுக்காகச் செலவிட்டதால் இதர நல்ல வீரர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பார்க்கும்போது ஆரம்பத்தில் சில ஆட்டங்களில் தோற்றாலும் பிறகு மீண்டு வருபவர்களாக இந்தமுறை அவர்களைச் சொல்ல முடியவில்லை. எனக்கு நம்பிக்கையில்லை. இந்தமுறை அதற்கான பலம் அவர்களிடம் இல்லை.
இந்திய அணிக்காக விளையாடும்போது ரோஹித் சர்மா நன்கு விளையாடுகிறார். ஆனால் ஐபிஎல் போட்டியில் அவருடைய ரன்கள் சராசரியும் ஸ்டிரைக் ரேட்டும் குறைவாக உள்ளன. ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும்போது அவரைப் பற்றித்தான் நினைக்கிறார்.
ஆனால் ஐபிஎல் போட்டியில் ராகுல் போல அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற்போல நிதானமாக விளையாடுகிறார். பாண்டியாவும் கடந்த ஆட்டத்தில் அப்படி விளையாடினார். எவ்வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாக விளையாடினால் இந்தியாவுக்காக விளையாடும்போதும் காணும் ரோஹித் சர்மாவை ஐபிஎல் ஆட்டத்திலும் பார்க்க முடியும்” என்று தெரிவித்தார்.