ஐபிஎல் 2022: சஹாருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய அறிவுரை வழங்கிய இர்ஃபான் பதான்!
தீபக் சாஹர் மிகச்சிறந்த வீரர் என்பதைக் காட்டிலும், அண்மைக்காலத்தில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களில் ஆடிவரும் தீபக் சாஹர், புதிய பந்தில் அருமையாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். மேலும் பவர்ப்ளேயிலேயே ஒன்றிரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுக்கவல்லவர்.
சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களாக சிறந்த பங்களிப்பு செய்துவரும் தீபக் சாஹரை ஏலத்திற்கு முன் தக்கவைக்காத சிஎஸ்கே அணி, ஏலத்தில் அவரை ரூ.14 கோடி கொடுத்து எடுத்தது.
நல்ல ஸ்விங் பவுலரான தீபக் சாஹர், புதிய பந்தில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் மட்டுமல்லாது நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர். தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பந்துவீசியதுடன் அபாரமாக பேட்டிங்கும் ஆடினார். எனவே அவரது ஆல்ரவுண்ட் திறமையை பார்த்த அணிகள், ஐபிஎல் ஏலத்தில் அவர் மீது ஆர்வம் காட்டின.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தீபக் சாஹருக்காக சிஎஸ்கேவுடன் கடும் போட்டியிட்டன. ஆனால் ஏற்கனவே சிஎஸ்கே அணி செட்டப்பில் நன்கு செட் ஆகிவிட்ட தீபக் சாஹரை எத்தனை கோடி கொடுத்தேனும் எடுத்தே தீரும் உறுதியில் இருந்த சிஎஸ்கே அணி, ரூ.14 கோடிக்கு தீபக் சாஹரை எடுத்தது.
ஆனால் தீபக் சாஹர் காயம் காரணமாக ஐபிஎல்லில் முதல் பாதி சீசனில் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அவருக்கு சரியான மாற்று வீரர் யார் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், ஷர்துல் தாகூரும் அணியில் இல்லை. எனவே சரியான மாற்று வீரரை உறுதி செய்ய வேண்டும். இளம் திறமையான வீரரான ஹங்கர்கேகர் சரியான மாற்றாக இருப்பார் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
அண்டர் 19 வீரரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சிறந்த ஆல்ரவுண்டர். அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங் என அதிரடி ஆல்ரவுண்டர் இவர். ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடப்படும் இவரை ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி.