ஐபிஎல் 2022: காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற இஷான் கிஷான்!
மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கி அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளை எதிர்கொண்டு 81 ரன்கள் சேர்த்தார். இதில் இஷான் கிஷன் 11 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசினார். இதனால் மும்பை அணி 178 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
அதன்பின் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்தப் போட்டியின் போது இஷான் கிஷன் பேட்டிங் செய்கையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் வலியை பொருட்படுத்தாமல் இஷான் கிஷன் கடைசி வரை விளையாடினார். இன்னிங்சிஸ் இடைவெளியின் போது மும்பை அணி மருத்துவ குழு அவரை மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய அழைத்து சென்றது. இதனால் அவருக்கு பதிலாக ஜோயல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.
இந்த நிலையில், 8ஆவது ஓவரின் போது இஷான் கிஷன் மீண்டும் களத்துக்கு திரும்பினார். ஸ்கேனில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் அவர் உடனடியாக களத்துக்கு திரும்பினார். இஷான் கிஷன் நினைத்து இருந்தால் அவர் ஓய்வு எடுத்திருக்கலாம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் போட்டியில் பங்கேற்றது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.