ஐபிஎல் 2022: உமேஷ் பந்துவீச்சில் திணறியது பஞ்சாப்; கேகேஆருக்கு 138 இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய பானுகா ராஜபக்ஷா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 31 ரன்கள் சேர்த்திருந்த ராஜபக்ஷா, ஷிவம் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பின் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஷிகர் தவான் 16 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், ராஜ் பாவா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சஹார் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 102 ரன்களுக்கே பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஓடியன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த காகிசோ ரபாடா அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரி என விளாசி கேகேஆர் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் 18.2 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 137 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீச 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.