ஐபிஎல் 2022: வர்ணனையாளர் குழு அறிவிப்பு!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது.
இதில் ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்தியப் பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. போட்டியின் ஆணையராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் மீண்டும் தொலைக்காட்சி வர்ணனைக் குழுவுக்குத் திரும்பியுள்ளார் ரவி சாஸ்திரி. ஐபிஎல் 2022 போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு வர்ணனையாளராக இப்போட்டியில் ரவி சாஸ்திரி பணியாற்றவுள்ளார்.
இம்முறை ஹிந்தியில் வர்ணனை செய்யவுள்ளார். அதேபோல ஏலத்திலும் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத சுரேஷ் ரெய்னாவும் ஹிந்தி வர்ணனைக் குழுவில் இணைந்துள்ளார். நடப்பு சீசனுக்கான வர்ணனையாளர் பட்டியலை ஸ்டார் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி 2022: வர்ணனைக் குழு
ஆங்கிலம்: ஹர்ஷா போக்ளே, கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப் தாஸ்குப்தா, அஞ்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், எம்பேங்வா, நிகோலஸ் நைட், டேனி மாரிஸன், சைமன் டுல், மேத்யூ ஹேடன், கெவின் பீட்டர்சன்
ஹிந்தி: ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், கெளதம் கம்பீர், பார்தீவ் படேல், நிகில் சோப்ரா, தன்யா புரோஹித், கிரன் மோர், ஜதின், சுரேன் சுந்தரம், சுரேஷ் ரெய்னா.