ஐபிஎல் 2022: லக்னோ அணி மீட்டிங்கில் ஆவேசமாக பேசிய கம்பீர்!
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்றில் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது. இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
இரு அணிகளுமே தலா 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், நேற்று இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி வெறும் 144 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் 145 ரன்கள் என்ற எளிய இலக்கை லக்னோ அணியை அடிக்கவிடாமல் வெறும் 82 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குஜராத் அணி.
இந்த போட்டியில் லக்னோ அணி தோற்றது பேரதிர்ச்சிதான். ஏனெனில் 145 ரன்கள் என்பது எளிய இலக்கும். தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த லக்னோ அணி, அதை எளிதாக அடித்திருக்க வேண்டும். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபாரமான பவுலிங் மற்றும் சிறப்பான ஆட்டத்தால் லக்னோ அணி தோல்வியடைந்தது.
இந்த தோல்விக்கு பின்னர் லக்னோ அணி வீரர்களிடம் பேசிய ஆலோசகர் கௌதம் கம்பீர், “தோற்பதில் எந்த தவறும் இல்லை. போட்டி என்றால் ஒரு அணி ஜெயிக்கும்; ஒரு அணி தோற்கும் ஆனால் இந்த போட்டியில் நாம் (லக்னோ அணி) விட்டுக்கொடுத்துவிட்டோம்.
நாம் பலவீனமாக இருந்தோம். ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் இதுமாதிரி பலவீனமாக இருக்க இடமேயில்லை. அதுதான் பிரச்னை. இந்த தொடரில் நிறைய அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இன்று Game sense-ல் கோட்டைவிட்டுவிட்டோம். அதுதான் மிக முக்கியம். அதில் கோட்டைவிட்டோம்” என்று தெரிவித்தார்.