ஐபிஎல் 2022: 6ஆவது தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 24 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மனீஷ் பாண்டே அடித்து ஆடி 29 பந்தில் 38 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் ஆடினார் கேப்டன் ராகுல். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அடித்து ஆடிய கேஎல் ராகுல் ஐபிஎல்லில் 3ஆவது சதத்தை பதிவு செய்தார். 2ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதம் விளாசினார் கேஎல் ராகுல். தீபக் ஹூடா 8 பந்தில் 15 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரை அருமையாக வீசிய ஜெய்தேவ் உனாத்கத், அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கேஎல் ராகுல் 60 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார். 20 ஓவரில் 199 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 200 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இப்போட்டியில் 13 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆனால் திலக் வர்மா 26 ரன்களிலும், மும்பை அணியின் நம்பிக்கையாக இருந்த சூர்யகுமார் யாதவ் 37 ரன்களிலும் விக்கெட்டை இழக்க மும்பை அணியின் வெற்றி வாய்ப்பும் கடினமானது.
ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் அதிரடியில் லக்னோ அணியை மிரளவைத்தார். அதற்கேற்றார் போல் மறுமுனையிலிருந்த ஜெய்தேவ் உனாட்கட் 19ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.
இதன்மூலம் ஆட்டத்தின் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிபெற 26 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் பொல்லார்ட் இருந்ததால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்தனர்.
ஆனால் 20ஆவது ஓவரின் முதல் பந்திலேயே உனாட்கட் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து களமிறங்கிய முருகன் அஸ்வின் முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி மிரளவைத்தார். ஆனால் அதன்பின் மூன்றாவது பந்தில் அவரும் ரன் அவுட்டாக ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதில் பொல்லார்டும் 25 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் வீழ்ந்தது மட்டுமின்றி, தொடர்ச்சியாக 6ஆவது தோல்வியைச் சந்தித்தது.