கெயில், பொல்லார்ட் வரிசையில் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ்!
Alex Hales Records: டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை அலெக்ஸ் ஹேல்ஸ் படைத்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் 2025 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை சேர்த்திருந்தது.
இந்த போட்டியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 39 ரன்களையும், சாம்ப்சான் 25 ரன்களையும், பிரிட்டோரியஸ் 21 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், டிரென்ஸ் ஹிண்ட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 116 ரன்களையும் சேர்த்தனர். பின் 52 ரன்களுக்கு காலின் முன்ரோவும், 74 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸும் விக்கெட்டை இழந்த நிலையிலும், அந்த அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அகீல் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில் இப்போட்டியின் மூலம் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜாம்பவன்கள் வரிசையில் இணைந்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 74 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக கிறிஸ் கெயில், கீரன் பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- கிறிஸ் கெய்ல் - 463 போட்டிகளில் 14,562 ரன்கள்
- கீரோன் பொல்லார்ட் - 713 போட்டிகளில் 14,024 ரன்கள்
- அலெக்ஸ் ஹேல்ஸ் - 509 போட்டிகளில் 14,012 ரன்கள்
- டேவிட் வார்னர் - 424 போட்டிகளில் 13,595 ரன்கள்
- ஷோயப் மாலிக் - 557 போட்டிகளில் 13,571 ரன்கள்
Also Read: LIVE Cricket Score
2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணிக்காக 75 டி20 போட்டிகளில் விளையாடி 2,074 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும். கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின், அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்து ஹேல்ஸ் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.