ஐபிஎல் 2022: அஸ்திவாரத்தை தகர்த்த ஷமி; அணியை மீட்ட ஹூடா, பதோனி!

Updated: Mon, Mar 28 2022 21:26 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே புதிய அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். குஜராத்துக்கு முதல் ஓவரை முகமது ஷமி வீசினார்.

முகமது ஷமி வீசிய முதல் பந்து ராகுல் பேட்டுக்கு அருகே சென்று கீப்பரை அடைந்தது. நடுவர் அவுட் தராததால், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா ரிவியூ கேட்டு முறையிட்டார். ரிவியூவில் பந்து பேட்டை உரசிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனால், ராகுல் முதல் பந்திலேயே 'டக்' அவுட் ஆனார்.

இரண்டு அணிகளுக்குமே ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஆட்டம். முதல் ஆட்டத்தின் முதல் பந்து குஜராத்துக்கு அட்டகாசமாகவும் லக்னௌவுக்கு சோகமாகவும் அமைந்தது.

அவரைத் தொடர்ந்து டி காக் 7, மனீஷ் பாண்டே 5 ரன்கள் என அடுத்தடுத்து முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த எவின் லூவிஸ், வருண் ஆரோன் பந்துவீச்சில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா - ஆயூஷ் பதோனி இணை ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி விக்கெட் இழப்பைப் தடுத்தனர். இதனால் லக்னோ அணியின் ஸ்கோரும் சிறுக சிறுக உயர்ந்தது.

அதன்பின் அதிரடியாக விளையாடிய இருவரும் மளமளவென ஸ்கோரை உயர்த்த, குஜராத் பந்துவீச்சாளர்கள் இந்த இணையை பிரிக்க திணறினர். இதில் அபாரமாக விளையாடிய தீபக் ஹூடா அரைசதம் கடந்து அசத்தினார். 

பின் 55 ரன்கள் சேர்த்த நிலையில் ஹூடா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குர்னால் பாண்டியா தனது பங்கிற்கு ஒருசி பவுண்டரிகளை விளாசினார்.

இதற்கிடையில் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆயூஷ் பதோனி 38 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 54 ரன்களையும், தீபக் ஹூடா 55 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை