ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெல்வது யார்?

Updated: Fri, Mar 25 2022 22:40 IST
Image Source: Google

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இம்முறை லக்னோ, குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி உள்ளது. 

இம்முறை ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு 25% ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரை வெற்றிகரமாக துவங்குவதற்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த போட்டியை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகிறது. குறிப்பாக கடந்த வருடம் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதே கொல்கத்தாவை தோற்கடித்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 4ஆவது முறையாக கோப்பையை வென்றது. 

ஆனால் இம்முறை கேப்டனாக இருந்த தோனி பதவி விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும். இருப்பினும் ஜடேஜாவின் தலைமையில் விளையாடும் அவர் நிச்சயமாக சென்னை அணியை துணை நின்று வழிநடத்துவார் என எதிர்பார்க்கலாம்.

சென்னை அணியை பொறுத்தவரை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தால் விலகியது மிகப்பெரிய பின்னடைவாகும். அதேபோல் கடந்த வருடம் அசத்திய டு பிளேஸிஸ், ஷார்துல் தாகூர் ஆகியோர் இம்முறை இல்லாததும் அந்த அணிக்கு பின்னடைவாகும். அதேபோல் முதல் போட்டியில் ஆல்- ரவுண்டர் மொயின் அலி விளையாடமாட்டார் என்பதும் சென்னை ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாகும்.

இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட், டேவோன் கான்வே, உத்தப்பா, ராயுடு என ரவீந்திர ஜடேஜா தலைமையில் புதிய பயணத்தை தொடங்கும் சென்னை அணியில் இளமையும் அனுபவம் நிறைந்துள்ளதால் நிச்சயமாக இந்த போட்டியில் வெற்றி பெற தோனியின் ஆலோசனைகளின்படி போராடும் என எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணியை பொறுத்தவரை கடந்த வருடம் பைனலில் தோல்வியை பரிசளித்த சென்னைக்கு இந்த போட்டியில் பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்காக அதிரடியாக பேட்டிங் செய்து நல்ல பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் அந்த அணிக்கு கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய பலமாகும். 

அதிலும் கடந்த சீசன்களில் டெல்லி அணியை வழிநடத்திய அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். மேலும் அந்த அணியில் வெங்கடேஷ் ஐயர், வருன் சக்ரவர்த்தி போன்ற இளம் வீரர்களும் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் போன்ற தரமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளதால் சென்னைக்கு ஈடு கொடுத்து கொல்கத்தாவும் வெற்றிக்கு போராடும் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வரலாற்று புள்ளிவிவரம்

1. ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் 17 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை வலுவான அணியாக கருதப்படுகிறது. கொல்கத்தா 8 போட்டிகளில் மட்டும் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2. கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்ற சென்னை வலுவான அணியாக உள்ளது. 1 போட்டியில் மட்டுமே கொல்கத்தா வென்றது.

இந்த போட்டி நடைபெறும் மும்பை வான்கடே சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும். அதேபோல் மும்பை வான்கடே மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. 

மேலும் இந்த மைதானத்தின் பவுண்டரிகள் அளவில் சிறியது என்பதால் பொதுவாகவே இங்கு பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள். அதேபோல் இந்த மைதானத்தில் இயற்கையாகவே சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமும் காணப்படலாம். அதற்கு ஈடாக திறமையை வெளிப்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுக்கக்கூடும்.

இந்த மைதானத்தில் வரலாற்றில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் : 167 ஆகும். இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து அதன் பின் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை