ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
India squad For Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ரியான் பராக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில், ஷுப்மன் கில்லுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் அணியில் இல்லாத நிலையில், தற்சமயம் அவருக்கு இந்திய டி20 அணியின் துணைக்கேப்டன் பதவி வழங்கி இருப்பது ஒருபக்கம் ஆதரவையும், ஒருபக்கம் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது.
மேலும் இந்த அணியில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோருடன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதேசமயம் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க தவறி வரும் ஷிவம் தூபே, ரிங்கு சிங் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கி இருப்பதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டி20 அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரின்கு சிங்