ஐபிஎல் 2022: தோல்விக்கு பிறகு அணி வீரர்களிடம் உருக்கமாக பேசிய தோனி - தகவல்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் துவக்க போட்டிகள், சிஎஸ்கேவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்டு 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் லக்னோ, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் சொதப்பல், தீபக் சஹார் இல்லாதது, பௌலர்கள் சொதப்பல்கள்தான். இதையனைத்தையும் சரிசெய்தால் மட்டுமே சிஎஸ்கே மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
அதேபோல் புதுக் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தனது கேப்டன்ஸி அழுத்தங்களை, சிறப்பான முறையில் எதிர்கொண்டு மீண்டும் அதிரடி காட்ட ஆரம்பித்துவிட்டால், சிஎஸ்கே மீண்டும் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் நான்கு தோல்விகளை சந்தித்து குறித்தும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேச சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது பேசிய தோனி, “இன்னும் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோற்றால், பிளே வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும். இதனால், தயவுசெய்து உங்களால் முடிந்த அனைத்தையும் இனி செய்யுங்கள். பயிற்சியில் சிறப்பாக செயல்படும் நீங்கள், போட்டியின்போது எப்படி சொதப்புகிறீர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் இப்படி விளையாடுவதைப் பார்த்தால், நான் அணியிலிருந்து விலகி, வேறு ஒருவருக்கு என் இடத்தை கொடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இனி மீண்டும் சொதப்பினால் நான் அதைத்தான் செய்வேன். வேறு வழியில்லை. தயவுசெய்து எனக்காகவாவது சிறப்பாக விளையாடுங்கள். இடையிலேயே ஓய்வை அறிவிக்க வைத்துவிடாதீர்கள்” என உருக்கமாக பேசியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தோனியின் இந்த பேச்சை கேட்டதும் ருதுராஜ், முகேஷ் சௌத்ரி போன்ற இளம் வீரர்கள் சற்று கண்கலங்கியதாகவும் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.