ஐபிஎல் 2022: சொதப்பிய தொடக்க வீரர்கள்; கம்பேக் கொடுத்த விண்டேஜ் தோனி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்று கோலகலமாக தொடங்கியது. இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டேவன் கான்வே இணை களமிறங்கியது.
கேகேஆர் அணி தரப்பில் முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அதனை எதிர்கொண்ட கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றமளித்தார்.
அதன்பின் தனது இரண்டாவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ், டேவன் கான்வேவின் விக்கெட்டையும் கைப்பற்றி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்த ராயூடுவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
பின் 28 ரன்களில் உத்தப்பா விக்கெட்டை இழக்க, 15 ரன்களில் ராயூடு எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - எம் எஸ் தோனி இணை நிதானமாக விளையாடிய விக்கெட் இழப்பை தடுத்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய தோனி மளமளவென ஸ்கோரை உயர்த்தினார். இதில் 38 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக மகேந்திர சிங் தோனி 50 ரன்களையும், ராபின் உத்தப்பா 28 ரன்களையும் சேர்த்தனர்.
கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.