ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்; பிளே ஆஃப்க்கு முன்னேறியது ஆர்சிபி!

Updated: Sat, May 21 2022 23:25 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேப்பிட்டல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை. 

ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும். எனவே வெற்றி கட்டாயத்தில் இன்று டெல்லி அணி களமிறங்கி ஆடிவருகிறது. 

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3வது ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பிரித்வி ஷாவும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, சர்ஃபராஸ் கானும் 10 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ரோவ்மன் பவலும் பொறுப்புடனும், அதேவேளையில் அடித்தும் ஆடியதால் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 5வது விக்கெட்டுக்கு பவலும் ரிஷப்பும் சேர்ந்து 75 ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 39 ரன்களும், பவல் 43 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய அக்ஸர் படேல், 10 பந்தில் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்து, 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  பும்ரா அபாரமாக பந்துவீசி பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரோவ்மன் பவல் ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - டெவால்ட் ப்ரீவிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் இஷான் கிஷான் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையிலிருந்த ப்ரீவிஸும் 37 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா - டிம் டேவிட் இணை பொறுமையாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தது. அதன்பின் சிக்சர் மழை பொழிந்த டிம் டேவிட் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

பின்னர் 34 ரன்களைச் சேர்த்திருந்த டிம் டேவிட் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை வெற்றிபெற 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அதன்பின் களமிறங்கிய ரமந்தீப் சிங்கும் பவுண்டரி விளாச, மறுமுனையிலிருந்த திலக் வர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் 19.1 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை